கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விசா வழங்கும் சர்ச்சைக்குரிய VFS நிறுவனம் இந்திய நிறுவனம் அல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
VFS என்பது பெரும்பாலும் பிளாக் ஸ்டோன் குழுமத்திற்கு சொந்தமான ஒரு சர்வதேச நிறுவனம் என்றும், அதன் பங்குதாரர் ஜெர்மனியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வாரம் விசா வழங்குதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பொது பாதுகாப்பு அமைச்சின் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் VFS நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கட்டுநாயக்கா- பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் இலங்கை பயணி ஒருவரின் நடத்தை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளி மூலம் குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அமைச்சர் அதனை மறுத்திருந்ததுடன், விசா கருமபீடத்தில் 13 இலங்கையர்கள் அப்போது பணியாற்றியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
விசா வழங்குவது அல்லது நிராகரிப்பது தொடர்பாக VFS எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, குடிவரவுத் திணைக்களத்தால் மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
ஏப்ரல் 17ஆம் திகதி முதல் விமான நிலைய வளாகத்தில் VFS தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
கட்டுநாயக்க- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் இவ்வாறானதொரு நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான யோசனையொன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் அமைச்சரவைக்கு கிடைத்திருந்ததாக” அவர் மேலும் கூறியுள்ளார்.