ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆதரவாக இருந்தாலும் சுமந்திரன் எதிராகவே இருக்கின்றார் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கானத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஆனால், இதுவரை வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவரே பிரேரிக்கப்படுவார்.
இதேவேளை, தமிழ்த் பொது வேட்பாளர் தொடர்பில் மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
ஆகையினால் அவர்களுடனும் பேசவுள்ளோம். அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இந்த விடயத்தில் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார்.
மேலும், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதன் முக்கிய தலைவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலைப்பாட்டில் ஆதரவாக உள்ளனர். ஆனாலும், அக்கட்சியின் சுமந்திரன் போன்றோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.” – என்றார்.