பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு ரகசியங்கள் கசிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபுல் ஹஸ்னத் சுல்கர்னைன் இன்று (30) இந்த முடிவை அறிவித்தார்.
இந்த சிறப்பு நீதிமன்றம் அதிகாரபூர்வ ரகசிய சட்டம் 2023 இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பானது பெப்ரவரி 8 பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை இம்ரான் கான் மறுத்துள்ளார்.
2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
சைபர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது