கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள் மீட்பு: உறுதிப்படுத்திய சீஷெல்ஸ்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் 06 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கை மீனவர்களை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல் மைல் தொலைவில் மீன்பிடி இழுவை படகொன்று மற்றும் 6 மீனவர்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலிய கடற்படையினருடன் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து குறித்த இலங்கை மீனவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலியாவின் கடற்படைத் தளபதி அட்மிரல் அப்திவர்சமே ஒஸ்மானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும் வேலுப்பிள்ளை கனநாதன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin