அமெரிக்காவின், ஜோர்ஜியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுத்தியலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
25 வயதான விவேக் சைனி என்ற முதுகலை படிப்பினை மேற்கொண்டு வந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி. முதுகலை படிப்புக்காக அமெரிக்காவுக்கு இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள லிதோனியா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விவேக் சைனி படித்து வந்தார்.
தனது படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் விவேக் சைனி பணியாற்றி வந்தார்.
இவர் பணியாற்றி வந்த சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள வீதியில் போதைக்கு அடிமையான ஜுலியன் பவுல்க்னே என்பவர் சுற்றி வந்துள்ளார்.
வீடு இல்லாமல் வீதியில் கிடந்ததால் விவேக் சைனி இரக்கப்பட்டு பவுல்க்னேவிற்கு சூப்பர் மார்க்கெட்டில் தங்க இடம் கொடுத்து இருக்கிறார்.
நாளடைவில் ஜுலியன் பவுல்க்னேவின் செயல்பாடு அச்சுறுத்தும் விதமாக இருந்ததால் உடனே அங்கிருந்து கிளம்புமாறு விவேக் சைனி கூறியுள்ளார்.
மேலும் உடனே கிளம்பாவிட்டால் பொலிஸாரிடம் முறையிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.
இதனால், கோபம் அடைந்த பவுல்க்னே, தனக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய நபர் என்று கூட பார்க்காமல், தன்னிடம் இருந்த சுத்தியலால் விவேக் சைனியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
50-க்கும் மேற்பட்ட முறை தாக்கியதில் விவேக் சைனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமான காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.