மோசடியான முறையில் மதிப்பு கூட்டு வரியை ( VAT ) வசூலிக்கும் நிறுவனங்களை கண்டறிய, உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வட் வரியை அறவிடும் வர்த்தக நிறுவனங்கள் அது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்திருத்தல் அவசியமாகும்.
எனினும் அவ்வாறு பதிவு செய்யாமல், நுகர்வோரிடம் இருந்து மதிப்பு கூட்டு வரி வசூலிக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளைக் காணக்கிடைத்திருந்தது.
எனினும் VAT பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனம் வணிக பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது, அவர்களின் VAT பதிவு எண்ணை பார்வைக்குக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும், அவ்வாறு காட்சிப்படுத்தாத வணிக நிறுவனங்கள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக புகார் செய்யலாம் என்றும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமது திணைக்களத்துக்கு வட் வரியைப் பதிவு செய்யாத வணிக நிறுவனங்களும் வட் வரி அறவிடுதல் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
VAT இல் பதிவு செய்யாமல் VAT வசூலிப்பதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தியதாகவும், அந்த நிறுவனங்களின் கோப்புகள் மற்றும் கணினிகளை மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றியிருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.