துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்ட ஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தத் தொகையை வழங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​நாரம்மல நகருக்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், குறித்த உத்தரவை மீறி வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகனத்தை பின்தொடர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் லொறியை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்தியதுடன், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வெடித்தில் சாரதி உயிழந்தார்.

மஹரச்சியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், உதவி பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டு, நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin