ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
என்றாலும், தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த கோரப்பட்ட நிதியை வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பானர் ரோஹன ஹெட்டிஆரச்சி அண்மையில் கூறியிருந்தார்.
எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.