நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் நடைபெற உள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

‘‘நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆழமான விவாதங்கள் அவசியமாக உள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டம் ஒரு ஆபத்தான சட்டமாகும். இதனை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் அவசரப்படக்கூடாது.

சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களை வெளியிடுவது குற்றவியல் பொறுப்பு என சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சரத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட எவரும் கைது செய்யப்படலாம் என்பதால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் போன்ற சமூக வலையத்தளங்ளில் பதிவிடப்படும் விடயங்கள் தொடர்பிலும் சட்டத்தின் உள்ளடக்கத்தின் பிரகாரம் கையாளலாம். அதனால் இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யாமல் நிறைவேற்றக் கூடாது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தவறான தகவல்களால் நானும் பாதிக்கப்பட்டிருந்தாலும், சட்டத்தின் தற்போதைய வடிவம் மிகவும் ஆபத்தானதாகும்.‘‘ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் எதிர்வரும் ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைப்பதற்கு முன்பு விவாதிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin