தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர்கள் அதிகாரமிக்கவர்கள்: பேராயர்

கொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நியாயம் கேட்ட போராட்டத்தை அச்சுறுத்தும் நோக்கில் இது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இது சம்பந்தமாக தேவாலயத்தின் ஊழியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு அந்த தேவாலயத்தில் பேராயர் தலைமையில் இன்று விசேட திருப்பழி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது போது உரையாற்றிய பேராயர்,

“அதிஷ்டவசமாக அன்று கைக்குண்டு வெடிக்கவில்லை. CCTV கெமரா காட்சிகளை பார்வையிடாமல், தேவாலயத்தின் ஊழியர் உட்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணை தொடர்பாக பல்வேறு பொய்களை கூறினர். CCTV காட்சிகளில் குண்டு வைத்த நபர் தெளிவாக தெரிந்தார்.

பொலிஸார் அந்த நபர் பற்றி தேடவில்லை. இரண்டு வருடங்களுக்கு பின்னரும் நாங்கள் நீதியை கேட்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகளை நடத்துங்கள்.

கைக்குண்டை கொண்டு வந்து தேவாலயத்திற்குள் வைத்த நபர் இலங்கையை சேர்ந்த எவரோ ஒருவராக இருக்கலாம்.அந்த நபர் இருக்கின்றார். எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

காரணம் அந்த நபர் அவர்களின் ஆதரவாளர்.அவர்களே அந்த நபரை அனுப்பினர். முக்கிய நபர்களே கைக்குண்டை தேவாலயத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பேரணிகளை நடத்த வேண்டாம் என மக்களை அச்சுறுத்தவே குண்டை தேவாலயத்திற்குள் கொண்டு வந்து வைத்தனர்.

இது தேர்தல் ஆண்டு. தேர்தல் நடத்தப்பட்டால், மோசடி அரசியல்வாதிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பதா, புதிய ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதா என்பதை தீர்மானிக்க எமக்கு சந்தர்ப்பம் உள்ளது” என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin