பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடவும், ஆளில்லா வானூர்திகளை வாங்க உக்ரேனுக்கு இராணுவ நிதியுதவியை அதிகரிக்கவும் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார்.
நேற்று மாலை அவர் இந்த விஜயத்தை திடீரென மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. முன் அறிவிப்புகள் இதுவும் இந்த விஜயம் குறித்து வெளியாகியிருக்கவில்லை.
ரஷ்யப் படையெடுப்பின்போது உக்ரேனின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான பிரிட்டன், அடுத்த நிதியாண்டில் அதன் நிதி ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுக்கு (S$4.2 பில்லியன்) அதிகரிக்கும் என ரிஷி சுனக் கூறியுள்ளார்.
“உலகில் உள்ள நமது எதிரிகள் நீண்ட போர்களுக்கு எமக்கு பொறுமையும், வளங்களும் இல்லை என்று நம்புகின்றனர். அதனால், புடினுக்கு மட்டுமல்ல, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் உள்ள அவரது நண்பர்களுக்கு நாம் தைரியம் ஊட்டுகிறோம்,” என்று ரிஷி சுனக் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நடக்கும் அரசியல் உட்பூசலினால் இரண்டு முக்கிய உதவித் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கீவுக்கு மிக முக்கியத் தருணத்தில் சுனக்கின் பயணம் இடம்பெற்றுள்ளதுடன் உதவி அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு இராணுவ, நிதி உதவிக்கு கீவ் மேற்கத்திய நாடுகளை அதிகம் சார்ந்துள்ளது.
இரண்டு தலைவர்களும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்து இட்டனர். கீவ், நேட்டோ இராணுவக் கூட்டணியைச் சேரும்வரை அந்த உடன்படிக்கை நடப்பில் இருக்கும் என்று உக்ரேனியத் தலைவர் கூறினார்.