பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ‘ஹீட்டர்’ எனப்படும் வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை ஜனவரியில் பயன்படுத்த விருப்பமில்லாமல் இருக்கின்றனர்.
ஏனெனில் அந்நாட்டில் நிலவும் உறைபனி வெப்பநிலையை விட ஹீட்டரைப் பயன்படுத்தும்போது வரும் எரிசக்தி கட்டணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.
கிட்டத்தட்ட 65 விழுக்காடு மக்கள் ‘ஹீட்டர்’ பயன்பாட்டைக் குறைத்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளனர் என்றும் 7 விழுக்காட்டினர் ஹீட்டரை அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் ஸ்வீடிஷ் புதுபிக்கப்பட்ட எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான ‘அய்ரா’ நடத்திய கணக்காய்வில் கூறப்பட்டது.
இந்தக் கணக்காய்வில் கலந்துகொண்ட மூன்று பங்கிற்கும் அதிகமானோர் குளிர்ந்த வெப்பநிலையைத் தாங்குவதற்கான முக்கியக் காரணமாக உயர்ந்திருக்கும் எரிசக்தி விலையைக் குறிப்பிட்டனர் எனவும் அதேநேரம், பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் தனிப்பட்ட நிதி சுமைகளை மேற்கோள் காட்டினர் எனவும் அது தெரிவித்தது.
“உயர்ந்து வரும் எரிசக்தியின் விலை, எரிசக்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருள்களை அதிகமாக நம்பியிருக்கும் நிலை ஆகியவற்றுடன் பிரிட்டிஷ் குடும்பங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன என்பதை இந்தக் கணக்காய்வு நமக்கு அப்பட்டமாக நினைவூட்டுகிறது” என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் லெவர்த் கூறினார்.