ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் தம்மரதன தேரர்

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தயாராக உள்ளோம் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் தெரிவித்தார்.

‘மிஹிந்தலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் பாதையை மீள ஆரம்பிப்போம்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய தம்மரதன தேரர், ”நாட்டின் நலன் கருதி ஜனாதிபதித் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இலங்கை முழுவதிலுமுள்ள பல்வேறு துறைசார்ந்தவர்களை இணைத்து ஒரே அரசியல் கட்சியில் மற்றும் ஒரு சின்னத்தில் போட்டியிட வைக்கும் முனைப்பில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யவில்லை. எனக்காக தியாகம் செய்ய பல அரசியல் கட்சிகள் உள்ளன.

தண்ணீர், மின்சாரம், வரி என அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்களிடம் தீர்வு உள்ளது. திமிர்பிடித்த ஆட்சியாளர்களை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. அவர்கள் அனைவரும் சிறையில் இருக்க வேண்டும் அல்லது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

திருடிய அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவர்கள் எவ்வாறு சொத்துக்களை திரட்டினார்கள் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். 2332 வருடங்களுக்கு முன்னர் மிஹிந்தலையில் இருந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பாதை ஆரம்பிக்கப்பட்டது போல் மிஹிந்தலையில் இருந்து மீண்டும் அந்த பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: admin