ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்யும் ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார். எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்க கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட இதுவரை 4 பேர் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அத்துடன், தற்போது ஐந்தாவது நபராக பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பதல் உள்ளார். இதனால், அக்கட்சி பல்வேறு நெருக்கடிகளை வரும் நாட்களில் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுவதுடன், பொதுஜன பெரமுனவின் பல முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.