ஜனாதிபதித் தேர்தலில் உறுதி ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நிறுத்தப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”இந்நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள சந்தேகமில்லாமல் தீர்மானங்களை எடுக்கும் அனுபவமுள்ள ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவே உள்ளார். ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களை அமுல்படுத்துவதன் மூலம் 25 வருடங்களின் பின்னர் நாட்டின் தேசிய வருமானம் அதிகரிக்கும். அதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த தருணத்தில் நாட்டைக் காப்பாற்றுமாறு சிலரிடம் கோரிய போது பயந்து ஓடிப்போய் ஒளிந்துக்கொண்டவர்கள் இன்று மீண்டும் மக்களை தவறாக வழிநடத்திச் செயற்படுகின்றனர். ஆகவே, மக்கள் இவ்வாறு போலி பிரசாரங்களுக்கு அகப்பட வேண்டாம்.

நாடு பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மையை எட்டி வருகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் மிகவும் ஸ்திரமான பொருளாதாரமாக எமது பொருளாதார மாறும். ஜனாதிபதி அதற்கான அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்துள்ளார்.

ஐ.தே.கவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே. அவரால் மாத்திரமே இந்த நாட்டை உறுதியாக மீட்டெடுக்க முடியும்.” என்றும் பாலித ரங்கே பண்டார வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: admin