களுத்துறை சிறைச்சாலையில் மேலுமொரு கைதி மரணம்

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க இது தொடர்பில் கூறுகையில், இந்த கைதி நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர் மீண்டும் சுகவீனமடைந்து, பின்னர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த இவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து உடல் நலக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக நாகொட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் உயிரிழந்துள்ள போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.” எனவும் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

கைதிகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதால் மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கும் அனைத்து புதிய கைதிகளும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் காமினி திஸாநாயக்க கூறினார்.

களுத்துறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி கடந்த வாரம் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததுடன், மாத்தறை சிறைச்சாலையில் 17 கைதிகள் மூளைக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகளும் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin