நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்காகவே பசில் ராஜபக்சவால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார் என்றும், பொதுஜன பெரமுனவும் தேசியவாத முகாமும் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்சவின் ஆட்சிக் கவிழ்ப்பினால் ஏமாற்றமடைந்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு தற்போது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனக்கு 30 வருடகாலம் அரசியலில் அனுபவம் உள்ளது. நான் ஒரு தேசியவாதியாகவே எனது அரசியல் பயணத்தை முன்னெடுக்க விரும்புகிறேன். தேசியவாத அரசியல் தோல்வியடைய காரணம் அதனை முறையாக கையாளவில்லை என்பதாலேயே ஆகும்.
தேசியவாதத்தை தாண்டி ஒரு நாடால் முன்னேற முடியாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தேசியவாதத்தை பின்பற்றியதால்தான் அவர்களால் வேகமாக முன்னேற முடிந்துள்ளது.
சிலர் தேசியவாதத்தை இனவாதமாக பயன்படுத்தினர். இதனால்தான் எம்மால் தேசியவாதத்தை கையாண்டு எழுச்சியடைய முடியாது போனது. இந்தியா தேசியவாதத்தை பின்பற்றுவதால்தான் இன்று பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்ந்துள்ளது.” என்றார்.