ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருவதால் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோபமடைந்துள்ளதுடன், கட்சியை நகரம் மற்றும் கிராம மட்டத்தில் வலுப்படுத்துவதே தற்போதைய முக்கிய பணியென கூறியுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், மறுநாள் கட்சியின் செயற்குழுவும் கூடியது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் புதிய அரசியல் குழுவொன்று நியமிக்கப்பட்டமை இதில் ஒரு சிறப்பம்சமாகும்.
எதிர்காலத்தில் கட்சி என்ற ரீதியில் முடிவெடுப்பது மற்றும் கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுப்பது சிறப்பு குழுவின் பணியாகும்.
இந்தக் குழு அண்மையில் மலலசேகர மாவத்தையிலுள்ள நாமலின் இல்லத்தில் கூடியுள்ளது. இதில் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா எனக் கூறப்படுவது குறித்து கலந்துகொண்ட எம்.பிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தம்மிக பெரேராவை ஏன் நிறுத்த வேண்டும்?. நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாமே என எம்.பி ஒருவர் இதன்போது கூறியுள்ளார்.
இந்தப் கருத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதுடன், முதலில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என அனைவரிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு அல்ல, எந்தவொரு தேர்தலையும் சந்திக்கும் வகையில் கட்சியை முதலில் நாம் வலுப்படுத்த வேண்டும் என நாமல் எம்.பிகளுக்கு பதிலளித்துள்ளார்.
முதலில் கட்சியை உருவாக்கி அதனை ஒழுங்கமைத்து தேர்தலுக்கு தயார்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். அரசியல் சபை எனக்கு வழங்கிய பொறுப்பு கட்சியின் கட்டமைப்பை அமைப்பதே என நாமல் மேலும் இதன்போது எம்.பிக்களுக்கு சுட்டிக்காட்டினார்.
ஆம், இது நல்ல விடயம், இந்த நேரத்தில் நாம் அதை செய்ய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் ஒருவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், பலர் கிராமங்களுக்குச் செல்லும்போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். அதற்கு ஒரு தீர்வை வழங்க வேண்டுமெனவும் குறித்த இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள நாமல் எம்.பி., ஜனாதிபதித் தேர்தலில் நான்கு பேர் எமது கட்சியில் போட்டியிட விரும்புகின்றனர்.நானும் பசில் ராஜபக்ஷவும் கேட்கத் தீர்மானித்தால், ஆறு வேட்பாளர்கள் என நிலைமை மாறும். அதனால், நாம் சற்று சிந்தித்து பணியாற்ற வேண்டும் என நாமல் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள குறித்த இராஜாங்க அமைச்சர், ஆம், இப்படி ஒரு போட்டி இருப்பது நல்லது என நாமலின் கருத்தையும் அவர் ஆமோதித்தார்.
ஜனவரி மாதம் முதல் பொதுஜன பெரமுனவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.