மாத்தறை சிறைச்சாலையில் கட்டுபாடுகள் அதிகரிப்பு!

இன்றும் (24) நாளையும் (25) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி, உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மூளைக் காய்ச்சல் காரணமாக குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த சுகாதார பிரிவு தீர்மானித்துள்ளது.

அத்துடன் நத்தார் தினத்தன்று கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல கைதிகள் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor