அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமையை மக்களுக்கு இலவசப் பத்திரங்கள் மூலம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து தெளிவான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை இலவசப் பத்திரங்கள் மூலம் மக்களுக்கு மாற்றுவதில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு 8351 வீடுகளுக்கு இலவசப் பத்திரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள், வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான பிரச்சினைகள், உத்தரவாதங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், கொழும்பு மாநகர சபை மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin