சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன்- உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது கபடத்தனமானது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரிகமான அரசியல் பண்பு அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (29.10.2023) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த ஶ்ரீரங்கேஸ்வரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகைியில் –
சம்பந்தன் வயோதிபம் காரணமாகவோ நாடாளுமன்ற உறுப்பினரக்கான பணியை மேற்கொள்ள முடியாதவராகவோ இருப்பாராயின் அவரை விடுவித்து புதிய ஒரவருக்கு வாய்ப்பு வழங்குவதென்பது அந்த கட்சியின் உள்விவகாரம்.
ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் அரசியல் கொள்கை நிலை, கட்சி யாப்பு விதிமுறை, ஒழுக்கக் கட்டப்பாடுகள் என பல்வோறு அம்சங்களை உள்ளடக்கியே இருக்கும். அந்தவகையில் அந்தக்கட்சியின் உள்விவகாரங்களை கட்சிக்குள்ளேயே பேசி ஒரு தீர்மானத்தை பெற்று அல்லது ஒரு இணக்கப்பாட்டை பெற்று அங்கேயே அக்கட்சியின் தலைமை பொறுப்பு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மாற்றம் தொடர்பாக முடிவை பேசிக்கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயக மரபு.
அதை விடுத்து கட்சியின் உள்விவகாரங்களை ஊடகங்கள் முன்னிலையில் பொதுவெளியில் பகிரங்கமாக வெளிக்கொண்டுவருவது என்ன நோக்கத்தின் அடிப்படையில் என்பது தெளிவாக புலப்படுகின்றது.
அந்தவகையில் இரா.சம்பந்தன் ஐயாவின் தலைமைக் கதிரையை இலக்கு வைத்தே சுமந்திரன் பொதுவெளியில் பேசியிரக்கின்றார் என்றே தோன்றுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது