இலங்கையில் தற்போது சாராயத்தின் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராயப் போத்தலில் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் (19.10.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அதி விசேட சாராயப் போத்தலொன்றை உற்பத்தி செய்வதற்கு 1200 ரூபாதான் செலவாகின்றது.
எனினும், அது 3200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு போத்தலில் 2000 ரூபா இலாபம் வைக்கப் படுகின்றது. 2019க்கு முன்னரான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சாராய விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
ஆளுங்கட்சிக் குழுக்கூட்டத்திலும் இதுபற்றி கேள்வி எழுப்பினேன். ஐ.எம்.எப்.யோசனை என்கின்றனர்.
ஆனால் இலங்கையில் கசிப்பு என ஒன்று இருப்பது சர்வதேச நாணய நிதி யத்துக்குத் தெரியுமோ தெரியாது. விற்பனை குறைந்தால் எப்படி வருமானம் அதிகரிக்கும்?
சாராயம் விற்க வேண்டியதில்லை எனில் விற்கவேண்டாம். ஆனால். அரசுக்கு வருமானம் வேண்டுமெனில் விலை குறைப்பு பற்றி சிந்திக்க வேண்டும்.
சாராயம் விலை அதிகரிப்பால் கசிப்பு உள்ளிட்டவற்றை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரசுக்கு வருமானம் வரவேண்டுமெனில், சாதாரண விலைக்கு சாராயம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.