நாளையதினம் ஹர்த்தால் – மாணவர்களின் கல்வியுடன் விளையாடும் மாகாண கல்வி பணிப்பாளர்!
நாளையதினம் வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பேருந்துகளின் சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நாளையதினம் பாடசாலையை நடாத்துவதா இல்லையா என அந்த அந்த கல்வி வலயங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு கல்வி வலயம் பரீட்சையை வைத்து, ஒரு வலயம் பரீட்சையை பிற்போட்டால் அந்த பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகி விடும். இதனால் பிற்போடப்படும் பரீட்சைகள் மூலம் பிரயோசனம் இருக்காது.
இது குறித்து செய்தி வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்திற்கு ஒரு தெளிவான பதிலை வழங்குவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிரஞ்சன் அவர்களை இரண்டு தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அவர் கூட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த ஊடகவியலாளர் வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் திரு. பிரெக்ட்லி அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, அந்தந்த பாடசாலை அதிபர்களே, நாளையதினம் பரீட்சையை நடாத்துவதா இல்லையா என முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
நாளையதினம் பரீட்சையை நடாத்தினால் பேருந்தில் பாடசாலைக்கு வரும் மாணவர்களால் பாடசாலைக்கு வருகை தர முடியாது இருக்கும். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவர்.
தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் அவர்களது பொறுப்பற்ற இந்தப் பதிலானது மாணவர்களது கல்வியலும் பாடசாலை சமூகத்தின் நிர்வாக முறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.