மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என்கிறார் ஆளுநர் 

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.

10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாயக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தற்கால மாணவர்கள் விவசாயக் கல்வி மற்றும் தொழிநுட்ப அறிவுடன் கூடிய சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என கூறியதோடு அதற்கான உந்துதலைக் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கண்காட்சி நடைபெறும் துணுக்காய், மல்லாவி பிரதேசமானது ஒரு பின்தங்கிய மற்றும் போரால் பாதிக்கப்பட்ட கிராமமாகும். இன்றுவரை இம்மக்கள் பல சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இக்கண்காட்சியை தமது பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுத்தியுள்ளார்கள். அவ்வாறான இக்கண்காட்சிக்கு கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேம ஜெயந்த மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை ஆளுநர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலே புதிய அதிபர், ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். அது மிகவும் பயனுள்ள விடயமாக அமையும் என்றும் அவ்வாறான புதிய நியமனங்களை வழங்கும் போது அந்த அதிபர், ஆசிரியர்களை துணுக்காய் வலயம் முதலிய பின்தங்கிய பிரதேசங்களுக்கு நியமனம் செய்வது பயனுள்ளதாக அமையும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஆளுநர், இவ்வருடம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில் எமது வடக்கு மாகாணம் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது. அத்தோடு துணுக்காய் வலயம் அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியான விடயம் ஆகும். இது நம் அனைவரதும் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாட்டால் கிடைத்தது.

இக்கண்காட்சிக்காக அயராது உழைத்த வடக்கு மாகாண பிரதம செயலாளர், விவசாயம், கல்வி, சுகாதார திணைக்களங்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள், உத்தியோயகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் தெரிவித்தார்.
‘விவசாயத்தை, கல்வியில் தோல்வி அடைந்தவர்களே செய்வார்கள்’ என்ற பிழையான சிந்தனை நம் நாட்டிலே உள்ளது.

ஆனால் எமது அண்மை நாடான இந்தியா முதல் ஏனைய நாடுகளில் விவசாயத்தில் உயர் பட்டம் முடித்த்தவர்களும் விவசாயத்தை முறையாக கற்றவர்களும் விவசாயம் செய்கின்றார்கள். அதே போல் நம் நாட்டிலும் விவசாயத்தை முறையாக கற்று விவசாயம் செய்யும் விவசாயிகளாக மாணவர்கள் உருவாக வேண்டும். நம் மனதில் இருக்கும் பிழையான சிந்தனை நீங்குவதற்கும் எதிர்காலத்தில் சிறந்த விவசாயிகளாக மாணவர்கள் உருவாகுவதற்கும் இக்கண்காட்சி சந்தர்ப்பமாக அமையும்’ எனவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN