போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின…
(ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்)
போராட்ட காலத்தில் பெண் விடுதலை, பெண்களுக்கான சமவுரிமை என்ற விடயங்கள் பெரிதாகக் கையாளப்பட்டு வந்தன. போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 36வது நினைவெந்தல் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயககப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கத்தோடு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் எம்மை ஈடுபடுத்தி தற்போது ஜனநாயக வழியில் அரசியல் களத்தில் நிற்கின்றோம். எமக்காக உயிர்த்தியாகம் செய்த உறவுகளையும், முன்னாள் போராளிகளையும் நினைத்து அஞ்சலி செலுத்த வேண்டிய கட்டாய கடமை யாருக்கு இருக்கோ இல்லையோ ஜனநாயகப் போராளிகளாகிய நாம் அதனை முன்னெடுக்க வேண்டும். இது காலம் எமக்களித்த கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றும் முகமாக இன்றைய இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்துகின்றோம்.
எமது விடுதலைப் போராட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களின் பங்கு அதிகம் இருந்தது அதற்கு உதாரணமே மாலதி. அந்தப் பங்களிப்பின் பின்னணியே அவர் பெயரிலேயே படையணி அமைக்கப்பட்டது. எமது போராட்ட காலத்தில் சர்வதேச மகளிர் தினமாக நாங்கள் இன்றைய இந்த நாளையே அனுஷ்டித்து வந்தோம்.
விடுதலைப் போராட்ட காலத்திலே பெண் விடுதலை, பெண்களுக்கான சமவுரிமை என்ற விடங்கள் பெரிதாகக் கையாளப்பட்டு வந்தன. போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றியிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள், சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் மேலோங்கியுள்ளன. இவை தவிர்க்கப்பட வேண்டும்.
அரசர்கள் காலத்தில் பெண் அரசிகளின் வீரம் பற்றி வரலாறுகள் பல சொல்லியுள்ளன, நாம் கண்டதில்லை. ஆனால் உலகையே வியக்க வைத்த பெண்களின் வீர வராலற்றை நம் எம் கண்முன்னே இங்கு கண்டோம். அத்தகு பெருமை எமது இனத்திற்கு உண்டு. இந்த மண்ணுக்காக மாவீரர்களை ஈன்றெடுத்த தாய்மாருக்கும், மாவீரர்களுக்கும் நாங்கள் எப்போதும் தலைவணங்குபவர்களாகவே இருப்போம் என்று தெரிவித்தார்.