பால்மா இறக்குமதி வரிகள் நீக்கப்படுமானால் விலையை குறைக்க தயாராக இருப்பதாக இறக்குமதியாளர் உறுதியளித்துள்ளனர்.
தற்போது, பால்மா இறக்குமதி நடவடிக்கையின் போது 600 முதல் 650 ரூபா வரை வரியாக செலுத்த வேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் பால்மாவின் விலை சுமார் 1,100 ரூபாவாக காணப்படுகிறது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த வரி நீக்கப்படும் நிலையில் பால்மா பக்கெட் ஒன்றினை 600 முதல் 650 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு 10 வீதம் புதிய வரியை விதிப்பதற்கு வர்த்தக அமைச்சு சமீபத்தில் தீர்மானம் மேற்கொண்டது.
இதன்படி, 1 கிலோ பால்மாவை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது 225 ரூபா வாரியாக செலுத்தப்படுவதாக லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், பெறுமதி சேர் வரி (வெட்) 165 ரூபா, சமூக பாதுகாப்பு வைப்புத் தொகை 55 ரூபா மற்றும் விமான சேவைகள் வரி 122 ரூபாவும் அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பால்மா கிலோ ஒன்றுக்கு மொத்தமாக 567 ரூபா வரியாக செலுத்தப்படுகிறது.
குறித்த வரிகள் நீக்கப்படும் நிலையில் இரண்டு கோடி மக்களுக்கு குறைந்த விலையில் பால்மா பக்கெட்டுகளை வழங்க முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.