இலங்கையில் கடந்த வருடம் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டைவிட ஒப்பிடுகையில் கடந்த வருடம் இவ்வாறு திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 61 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 628 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அதிக பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில்
அதிகமான திருமணப் பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,591 ஆக பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், 17,300 திருமணங்களும், குருநாகல் மாவட்டத்தில் 12, 409 திருமணங்களும், பதிவுசெய்யப்பட்டுள்ளன.
குறைந்த எண்ணிக்கையான திருமணங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 899 ஆக காணப்படுகிறது.
கண்டியில் 10, 467 திருமணங்களும், மாத்தளையில் 3, 712 திருமணங்களும், நுவரெலியாவில் 5, 362 திருமணங்களும் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 4,908 திருமணங்களும், கிளிநொச்சியில் 1,021 திருமணங்களும், மன்னாரில் 1,033 திருமணங்களும், வவுனியாவில் 1,455 திருமணங்களும், மட்டக்களப்பில் 5,553 திருமணங்களும், அம்பாறையில் 6,437 திருமணங்களும், திருகோணமலையில் 3,555 திருமணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் பதுளையில் 6,131 திருமணங்களும், இரத்தினபுரியில் 7,743 திருமணங்களும் கேகாலையில் 5,822 திருமணங்களும் பதிவாகியிருந்தன.
கோவிட் பரவல் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமையால், 2020ஆம் ஆண்டில், திருமணப் பதிவுகளும் ஓரளவு வரையறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. எனினும், 2021 ஆம் ஆண்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.