கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்களுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது – அன்னராசா

செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்பகுதியிலே தமிழ்நாடு – காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இலங்கை கடல் கொள்ளையர்களால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை கடற்பரப்பிலேயே சகோதர மீனவர்கள் தாக்கப்பட்டமை கவலை அளிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது எங்களுக்கு என ஊர்காவற்துறை கடத்தொழிலாளர் சமாசங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவரை பார் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் அல்லது வடமாகண கடல் தொழிலாளர்கள் இந்திய கடற் தொழிலாளர்களின் விடயத்தில் வன்முறையை விரும்பியதும் இல்லை, வன்முறையை நோக்கி பயணிப்பதும் இல்லை. இந்த மீனவர்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் எப்பொழுது அறவழியிலும்,  ஜனநாயக வழியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம்.
கடந்த காலத்தில் இதுபோன்ற செயல்கள் வடக்கில் ஊக்குவிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் இருந்த போதும் கூட நாங்கள் எங்களது கடற் தொழிலாளர்களை வன்முறைக்கோ அல்லது யுத்தத்திற்கும் நாங்கள் செல்ல விடாது தடுத்தோம். ஏனென்றால் இது ஜனநாயக ரீதியில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம்.
எங்களைப் பொறுத்தவரையில் காரைக்கால் கடல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டமை கவலையளிக்கின்ற ஒரு விடயம். அதேவேளை இலங்கை அல்லது இந்திய மீனவர்களாக இருந்தாலும்  கடற்பரப்பில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக நாட்டுப் படகிலே வந்து மீன் பிடிக்கின்றார்கள்.
இது குறித்து நாங்கள் இன்றையதினம் வடக்கு மாகாண கடத்தொழிலாளர்களின் சங்கங்கள், சமாசங்கள் ஆகியவற்றை விசாரித்த வகையில், என்றைக்குமே நாங்கள் இவ்வாறான சம்பவங்களை செய்ய விரும்பவில்லை, செய்ததும் இல்லை. இதற்கும் வடக்குக் கடற் தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற செய்தியை எமக்குத் தெரிவித்திருந்தார்கள்.
எனவே இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் ஒருபோதும் இடம்பெறக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN