அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் விளைவாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவு போராட்டக்காரர்களிடமிருந்து கோரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
போராட்ட களத்தின் மீது தமக்கு உரிமை இருப்பதாக ஒரு குழுவொன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர்களிடமிருந்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் இடத்திலிருந்து போராட்டக்காரர்களை அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
அரசுக்கு சொந்தமான எந்த ஒரு சொத்தையும் எந்த ஒரு நபரும் வலுக்கட்டாயமாக கட்டுப்பாட்டில் வைக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
காலி முகத்திடலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்