இலங்கை அமைச்சரவையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய அமைச்சரவை சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கு முன்னதாக இந்த புதிய அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற போதிலும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இந்த புதிய அமைச்சரவையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் பலர் அடங்குவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் கொழும்பு செய்திப் பிரிவு வினவியதோடு, அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor