உதவி முகாமையாளரின் அடாவடித்தனம் – வீடு இன்றித் தவிக்கும் மக்கள்

மாத்தளை- எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து சேதப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட , ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் குறித்த குடும்பத்தினர் கேட்டுவந்துள்ளனர்.

இதற்கமைய தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர், ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமையாளர் அனுமதி வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன்,ஒரு கிழமைக்கு முன்பு அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு நேற்று(19.08.2023) தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

உதவி முகாமையாளர் உட்பட இரு அதிகாரிகள் இணைந்து வீட்டை உடைத்து பொருட்களை சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

மேலும் அந்த உதவி முகாமையாளரின் அடாவடித்தனம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor