பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கீரீன்கார்ட்டிற்கு காத்திருப்பதாகவும் அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி அமெரிக்க பிரஜை என்பதால் முன்னாள் ஜனாதிபதி கிறீன்கார்ட்டிற்கு தகுதியானவர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் சட்டத்தரணிகள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டனர் என விடயங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது கொழும்பில் உள்ள அவரது சட்டத்தரணிகள் மேலதிக ஆவணங்களை தகவல்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும்.
நாட்டுக்கு வருகை
இதேவேளை தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கியிருக்கும் தனது முன்னையை திட்டத்தை கைவிட்டுவிட்டு முன்னாள் ஜனாதிபதி 25 ம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களால் தாய்லாந்தில் அவர் எதிர்பார்த்த நடமாட்ட சுதந்திரம் கிட்டாததால் இரண்டு நாட்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து இலங்கை திரும்புவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் சிங்கப்பூரிலிருந்து சென்ற கோட்டாவை பாதுகாப்பு காரணங்களிற்காக அவரை ஹோட்டலிற்குள்ளேயே தங்கியிருக்குமாறு தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கோட்டாபய இலங்கை திரும்பியதும் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆராயும் எனவும் கூறப்படுகின்றது.