சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீராங்கனை

இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும், ஆசியாவில் வேறு எந்த ஒரு பெண் வீராங்கனையும் இவ்வளவு வயது வரை விளையாடியது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற ஏற்கனவே திட்டம்

2023ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வலைபந்தாட்ட போட்டித்தொடருடன் ஓய்வு பெறுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டாலும், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் கழகமட்ட போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அணியுடன் தாம் இணைந்து கொள்ள போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையை ஒருபோதும் அவர் மறந்துவிட வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அளவிலான அங்கீகாரம்

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்தமையே உலக அளவில் தமக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள், உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் தர்ஜினி பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் கடந்த 2021, 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் சிறந்த ஷூட்டர் விருதினை வென்றுள்ளார்.

மேலும் அவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2009 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சிறந்த ஷூட்டருக்கான விருது வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor