சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்

சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரலற்றவர்களின் குரல் பணியிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பொதுச்சுடரினை தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனையடுத்து மலர் மாலையினை குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அணிவித்தார்.
தொடர்ந்து, மலரஞ்சலி நிகழ்வும் அதன்பின், நினைவு சுடரும் ஏற்றிவைக்கபட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், சர்வமதப் பிரதிநிதிகள்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், விடுதலையான அரசியல் கைதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகள்
நினைவேந்தல்
யூலை-2023

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையும் காரணங்களும் காலத்திற்கு காலம் வேறுபடுகிறது.

அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் சந்தேகத்தின் பெயரில் பால்,வயது வேறுபாடின்றி கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள், இனத்தின் பெயரில் வஞ்சிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டவர்களாவர்.

இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் திட்டமிடப்பட்ட சிறைக்கலவரங்களாலும்
நோய்வாய்ப்பட்ட நிலையில்
போதிய மருத்துவ பராமரிப்பின்றியும் சிறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே நீதியின்றி பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளார்கள்.

1983 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஜூலைக் கலவரத்தின்போது, வெலிக்கடை சிறையின் அதியுயர் பாதுகாப்புப் பிரிவுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உட்பட்ட 54 தமிழ் அரசியல் கைதிகள் அரசின் கைக்கூலிகளால் சிறைக் கொட்டடிகளுக்குள்ளேயே கதறக் கதற கொன்றொழிக்கப்பட்டார்கள்.

அதேபோன்று, 1987 இல் பூசா தடுப்புமுகாமில் 9 தமிழ் அரசியல் கைதிகளும் ,
1997 இல் களுத்துறை சிறையில் 5 தமிழ் அரசியல் கைதிகளும் கொடூரமாக சாகடிக்கப்பட்டார்கள்.

2001 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம்மீது இனவெறிகொண்ட காடையர்கள் நடாத்திய மிருகத்தனமான தாக்குதலில் 27 தமிழ் அரசியல் கைதிகள் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

2012 இல் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சிறையதிகாரிகளாலும் விஷேட அதிரடிப்படையினராலும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவைமட்டுமல்ல,
யுத்த காலங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், நீண்டநெடுங்காலமாக கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் பலர் உடல் உள தாக்கங்களாலும் போதிய மருத்துவம் மற்றும் போஷாக்கான உணவின்மையாலும் நோய் நொடிகளுக்கு ஆளாகி சிறைக்குள் சாவடையும் பெருந்துயரம் அன்மைக்காலம்வரை இடம்பெற்றுக்கொண்டுதானிருக்கிறது.

இவ்வாறு நீண்டுசெல்கின்ற சிறைக்கொடுமைகளின் பட்டியலில், அங்க இழப்புகளுடனும் விழுப்புன்களுடனும் தப்பிப் பிழைத்து, இப்பூமிப் பந்தின் எங்கோர் மூலையில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், ஒரு இனச்சமூகத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டு வஞ்சகமாக கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நினைவுகூறப்பட்டு
தமிழர் எம் வறலாற்றாவனங்களில் இவர்களது சம்பவங்களும் சாவுகளும் சான்றாதாரங்களாக பொறிக்கப்படவேண்டும்.

அந்தவகையில், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பானது, ஆண்டுதோறும் வருகின்ற ஜூலை -25 ஆம் திகதியை ‘ உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள் ‘ என பிரகடனம் செய்து அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

-குரலற்றவர்களின் குரல்-

Recommended For You

About the Author: S.R.KARAN