உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை கொர்வெட் ஏவுகணையை தாங்கிய இந்தியக் கடற்படைக் கப்பலான ‘கஞ்சர்’, ஜூலை 29 முதல் 31 வரை திருகோணமலைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் என்விஎஸ் பானி குமார், கிழக்கு கடற்படைத் தளபதியை சந்திக்கவுள்ளார். மேலும் ஏவுகணை செயற்பாடுகள் குறித்து பல்வேறு தொழில்முறை தொடர்புகளும் இதன்போது நடத்தப்படவுள்ளன.
கடல்சார் கூட்டாண்மை பயிற்சி
இலங்கையில் இருந்து புறப்பட்ட பின்னர் திருகோணமலையில் இருந்து இலங்கை கடற்படை கப்பலுடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை ஜூலை 31 அன்று நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை மற்றும் அதன் திறன்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதற்காக பள்ளி மாணவர்களின் வருகைக்காக கப்பல் திறக்கப்பவுள்ளது.
அத்துடன் ஜூலை 30ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் பொதுமக்களுக்கும் கப்பலைப் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் திருகோணமலையில் யோகா அமர்வு, கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் சிறப்பு பள்ளி ஆகியவற்றையும் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்திய கடற்படை கப்பலான கஞ்சரின் விஜயம் அமையவுள்ளது.