முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழங்கு விசாரணைக்காக இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜூலை 13 ஆம் திகதி அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் அங்கிருந்து கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு சென்று கடந்த இம்மாதம் 11 ஆம் திகதி தாய்லாந்துக்கும் சென்றிருந்தார்.
இதேவேளை, மனிதாபிமான அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாகவும், வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை கோட்டாபய ராஜபக்ஷ தற்காலிகமாக தங்கியிருக்க முடியும் எனவும் தாய்லாந்து பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.