தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இன்றைய ( 21/07/2023) பாராளுமன்ற உரையின் ஒரு பகுதி
தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் சமஷ்டியை கோருவதை நிறுத்த வேண்டும் , அப்படி சமஷ்டியை கேட்பது பிரிவினைவாதம் , அதனால் அமைதியாக இருக்கும் சிங்கள இளைஞர்களை மீண்டும் தூண்டி விட வேண்டாம் என நேற்று இந்த சபையில் சிங்களத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றியிருந்தார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் .
சமஷ்டி ஆட்சியை பிரிவினையை கொண்டுவரும் என சொல்வது ஒரு வெட்கம்கெட்ட முட்டாள் தனமான கருத்து. ஒரு போர்க்குற்றவாளி சரத் வீரசேகரவும் இப்படி நேற்று கூறியிருந்தார். ஒரு போர்க்குற்றவாளி அப்படிகூறுவதை விட்டுவிடலாம்.
ஆனால், தன்னை ஒரு கல்வியிலாளனாக புத்திஜீவியாக ஒரு கலாநிதியாக காட்டிகொள்ளும் சுரேன் ராகவன், சமஷ்டி பிரிவினைக்கானது என சொல்லுவது சுத்த அறிவிலித்தனம்.
அவரது அறிவின் வங்குரோத்துதன்மையை மட்டுமல்ல அவரது கல்வியின் நேர்மையீனத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
தமிழ் மக்கள் அல்ல தமிழ் அரசியல்வாதிகள்தான் சமஷியை கோருகிறார்கள் என்று நீங்கள் கருதினால், நான் சுரேன் ராகவனுக்கு மட்டும் அல்ல நாங்கள் தமிழ் மக்களின் விருப்பை பிரதிபலிக்கவில்லை என கூறிக்கொண்டு இங்கே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு பகிரங்க சவால் விடுகிறேன்.
உங்களுக்கு துணிவிருந்தால் தமிழ் மக்களிடையே சமஷ்டி வேண்டுமா? அல்லது ஒற்றையாட்சி வேண்டுமா? என ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள் . உங்களுக்கு உண்மை தெரியும்.
நீங்கள் இங்கே இருந்து கொண்டு தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் / என்ன நினைக்க வேண்டும் என கூற தேவை இல்லை.
உங்களுக்கு உண்மையில் துணிவு இருந்தால், உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால், தமிழ் மக்களிடம் தனி நாடு வேண்டுமா என்று கூட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திப்பாருங்கள். அதன் பிறகு வந்து கதையுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.