இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.
இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சற்று முன்னர் சந்தித்தார்
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை – இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.