இலங்கையில் இரு தரப்பினர் இடையே நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அமெரிக்க யூத அமைப்பு முன்வந்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்க யூத கமிட்டியின் (AJC) ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி அர்ஜுன் ஹர்தாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு இடையே அல்லது அரசாங்கம் ஏனைய தரப்பினர் இடையே நடத்தப்படுகின்ற பேச்சு வார்த்தைகளுக்கு நோர்வே போன்று எம்மால் மத்தியஸ்தம் வகிக்க முடியாது.
ஆனால், இரு தரப்பினர் தங்களுக்குள் நிலவும் முரண்பாடுகளுக்கு தீர்வு காண – பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க விரும்பினால் நாங்கள் அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி எங்கு வேண்டுமானாலும் அவர்கள் இரு தரப்பினரையும் ஒரே மேசையில் வைத்து ஒரு நல்ல முடிவு எட்டப்படுவதற்கு – ஒரு இணக்கம் காண்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
எமது அமைப்பானது அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்பினர்களையும் ஒரே இடத்திற்கு அழைத்து வந்து பேசவைத்து அவர்களுக்கு இடையே இருந்த பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.
இதேபோன்று இலங்கையிலும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் – என்றார்.