வெள்ளி, ஞாயிறு தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தம்: ஆரோக்கியமான முடிவு
மதிப்புக்குரிய அரசாங்க அதிபரும் பிரதேச நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலர்களும் வணக்கத்துக்குரிய சமயத் தலைவர்களும் சமூகப் பொறுப்புடைய சான்றோர்களும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தனியார் கல்வி நிறுவன இயக்குனர்களும் அண்மையில் ஒன்று கூடி தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் நிறுத்துவதென எடுக்கப்பட்ட முடிவு ஆரோக்கியமானதும் மாணவர்களின் உடல், உள, சமூக ,ஆன்மீக மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவக் கூடியதுமாகும்.
மேற்படி சிறு பிள்ளைகள் ஏழு நாட்களும் ரியூஷன் என காலையிலிருந்து இரவு வரை அலைந்து திரிவதால் களைப்படைகின்றனர் பெற்றோரின் குறிப்பிட்ட அளவு நேரமும் இதில் உள்வாங்கப்படுகின்றது.
ஒரு பிள்ளையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது அவர் பெறுகின்ற அறிவில் மட்டும்
தங்கியிருக்கவில்லை சமயம்,கலை, விளையாட்டு ஆகிய மூன்றும் அறிவியல் வளர்ச்சியுடன் இணைய வேண்டும் அவ்வாறான பிள்ளைகள் எதிர்காலத்தில் சமூக எதிர்ப்புணர்வற்ற உடன்பாடான சிந்தனைகள் கொண்டவர்களாக விளங்குவர்,
இன்றைய சமூக வன்முறைகளுக்கு அடிப்படை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வளர்க்கப்பட்ட பிள்ளைகள் சமயம், கலை,விளையாட்டுக்களில் ஈடுபடாமை ஆகும், வாரத்தில் இரண்டு நாட்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சிறு பிள்ளைகள் செல்லாமல் விடுவதால் அவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது எங்களின் மனதில் உள்ள ஒருவகை ஊகமே தவிர அதில் உண்மை இல்லை. ஏனைய ஐந்து நாட்களும் அவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வியை தொடரத்தான் போகிறார்கள்.
இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் நேரம் கற்பவர்களாக யாழ் மாவட்ட பிள்ளைகள் உள்ளனர் ஆனால் கடந்த சில வருடங்களாக இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பிள்ளைகளின் அடைவு மட்டம் யாழ் மாவட்டத்தில் குறைவாக இருப்பதாக கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிள்ளைகள் வெள்ளி,ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கு அல்லது மறைக்கல்விக்கு செல்வதற்கு இது ஒரு வாய்ப்பான தருணமாக உள்ளது. இவ்வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் உடன் பாடான சிந்தனையோடு பிள்ளைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
அறநெறிக் கல்விக்கு அல்லது மறைக்கல்விக்கு பிள்ளைகள் செல்ல மாட்டார்கள் அவர்கள் பிழையான வழிகளில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற எண்ணம் பலர் மத்தியில் உண்டு. உண்மையில் க.பொ.த சாதாரண தர பிள்ளைகள் அல்லது க.பொ.த உயர்தரப் பிள்ளைகள் என்று குறிப்பிட்டால் மேற்படி கருத்தில் உண்மை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இவர்கள் தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான மிகவும் சிறு பிள்ளைகள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளை அவதானிப்பது அவர்களின் பொறுப்பாகும். அறநெறிப் பாடசாலை அல்லது மறைக்கல்விக்கு பிள்ளைகள் செல்லவில்லையென்றால் அவர்களை ஏனைய சமயச் செயற்பாடுகள் (பூசைகள், கூட்டுப் பிரார்த்தனைகள், தியானம், யோகாசனம், சமயவிழாக்கள்) கலை செயற்பாடுகள் (சங்கீதம், பண்ணிசை, மிருதங்கம், நடனம், வயலின், சித்திரம், ஓகன், கிட்டார்) விளையாட்டுச் செயற்பாடுகள் (கிரிக்கெட், உதை பந்தாட்டம், கூடைப்பந்து வலைப் பந்து, தாச்சி) போன்றவற்றில் ஈடுபடலாம். இயற்கை காட்சிகளை காண்பிக்கலாம் (வயற்காட்சி கடற்கரைக்காட்சி சிறுவர் பூங்கா)
எல்லாவற்றிற்கும் மேலாக பிள்ளைகள் இரண்டு நாட்களும் வீட்டில் இருக்கின்ற போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அன்புப் பிணைப்பு மேம்படும் (எல்லோரும் ஒன்றாக இருந்து உண்ணுதல்,
கலந்துரையாடுதல், விளையாட்டுக்களில் ஈடுபடுதல் நகைச்சுவை உணர்வை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுதல் )எனவே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி மாணவர்களின் வகுப்புக்களை நிறுத்துவதுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகப் பொறுப்புடையவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எங்களின் கூட்டு முயற்சியாக கூட்டுப் பொறுப்பாக இதனை நடைமுறைப்படுத்துவோம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குப் பின்பு இதன் விளைவுகளை அவதானிப்போம் .
சிறியேனுடைய உள்ளத்தில் உதித்த எண்ணங்களுக்கு வரிவடிவம் கொடுத்து அதனை இங்கு பதிவு செய்துள்ளேன் தங்களின் ஆரோக்கியமான கருத்துக்களை பணிவன்புடன் வரவேற்கின்றோம். “வாழ்க வளமுடன்”
சைவப் புலவர் பொன். சந்திரவேல்-JP,
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை.