புதிய இன அழிப்புப் போர்!

தெற்கின் அரசாங்கங்களும் மகா சங்கத்தினரும் அரச படைகளும் புதிய முறையிலான இன அழிப்புப் போர் ஒன்றை தொடங்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்  – த. சித்தார்த்தன் MP

2023 – வீரமக்கள் தின அறிக்கை

அன்பிற்குரிய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் வணக்கம்.

இன்று 34 வது வீரமக்கள் தினம். எமது அமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரும் அதன் முதலாவது தலைவருமான செயலதிபர் தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்கள், இனப் பகைவர்களினால் படுகொலை செய்யப்பட்ட முப்பத்துநான்காவது நினைவுநாள். எமது அமைப்பினால் வருடந்தோறும் நினைவுகூரப்படும் உன்னதமான தியாகத்திற்குரிய நாள். தமிழ் மக்களது விடுதலைக்காக மட்டுமல்லாது இந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்ட, தொடர்ந்து மறுக்கப்படுகின்ற சிறுபன்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்காகவும் தம்முயிரை ஆகுதியாக்கிக் கொண்ட அனைவரையும் உள்ளத்துள் வைத்து உணர்வால் போற்றுகின்ற நாள் ஆகும்.

இத் தீவின் பூர்வீக குடிகளாக, நீண்ட காலமாக தம்மைத் தாமே ஆண்டு வந்த தமிழ்ச் சமூகம், நானூறு ஆண்டுகால அந்நியர் ஆதிக்கம் முடிவுக்கு வந்து இலங்கை சுதந்திரம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகள் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்துவிட்டதாக எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் மைய ஆட்சியில், சிங்கள தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கவில்லை. எண்ணிக்கையில் அதிகமான சிங்கள மக்களே எண்ணிக்கையில் சிறுபான்மையினரான ஏனைய இன மக்களின் வாழ்வியலை, தொடர்ச்சியான இருப்பை, இன அடிப்படையில் பாரபட்சமான முறையில் தீர்மானித்து வந்துள்ளார்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம், வாக்குரிமை நீக்கம், மற்றும் தனிச் சிங்களச் சட்டம், தரப்படுத்தல் முறை போன்ற விடயங்கள் யாவும் தென்னிலங்கை அரசாங்கங்களின் இன ரீதியான உணர்வின் சாட்சிகளாகும்.

எமது வாழ்வியலை எமது வளங்களை நாமே நிர்வகிக்க வேண்டும், அதற்கான அரசமைப்பு முறையை உருவாக்க வேண்டுமென, தொடர்ச்சியாக அமைதி வழியில் போராடிய சிறுபான்மையினங்களின் மிதவாதத் தலைமைகளை, மாறி மாறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கங்கள் ஏமாற்றி வந்ததோடு அரச படைகளின் உதவியோடு அவர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டன.

மிதவாதத் தலைவர்களின் வழியில் உரிமைக்காக குரல் கொடுத்த இளைஞர்கள் இனம் காணா முறையில் கடத்தப்பட்டு சித்திரவதை மூலம் கொலை செய்யப்பட்டு தெருக்களில் வீசப்பட்டனர். தம்மைப் பாதுகாக்க தாமும் ஆயுதங்களை வைத்திருப்பதே ஒரே வழி என இளைஞர்கள் தீர்மானித்த வேளையிலேயே தமிழ் மக்களின் அமைதிவழி உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

தாய் மொழியாம் தமிழ், அந்த மொழியைப் பேசும் மக்கள் கூட்டம், அந்த மக்கள் வாழும் தாயக மண் அனைத்தும் ஒரு தேசமாக விடுதலை பெறுவதே இத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களினது தொடர்ச்சியான இருப்புக்கு ஒரே வழி என்பது இளைஞர்களின் தீர்மானமானது. அதுவே தனிநாட்டுக் கோரிக்கைக்கு அடிப்படையானது.

கடந்த நூற்றாண்டின் எழுபது மற்றும் எண்பதுகளில் தமிழ் இளஞர்கள் பல்வேறு குழுக்களாக செயற்பட்டாலும் அனைவரது நோக்கமும் ஒரே இலக்கை நோக்கியதாக இருந்தது. விடுதலையை அடைவதற்கான சித்தாந்தங்களில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மக்களின் விடுதலைக்கான பற்றுறுதியில் வேறுபாடுகளைக் காண முடியவில்லை.

நூறாண்டுகளுக்கு முன்பு பிறந்து இன்றும் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற சேகுவேரா போன்ற, மிக அரிதாகக் காணக்கூடிய உன்னதமான போராளிகளை தமிழ் விடுதலை இயக்கங்களிலே காணப்பெற்றோம். பௌத்த, சிங்கள மேலாதிக்கத்திலிருந்து பெறும் விடுதலை என்பது உண்மையான விடுதலை அல்லவென்பதும், சாதி சமய பிரதேச வாரியான சமூக அடக்குமுறைகளில் இருந்தும் முழுமையாக விடுதலை பெறும் நாளே எமது மக்களின் முழு விடுதலை நாளாக அமைய முடியும் என உறுதியாக நம்பி அதற்கான வேலைத்திட்டங்களுடன் களத்திலும் கருத்திலும் அர்ப்பணிப்புடன் யுத்தம் புரிந்த பல உன்னதமான தோழர்களை நாம் கண்டிருந்தோம்.

சிநேக முரண்பாடு – பகை முரண்பாடு, அக சுயநிர்ணயம் – புற சுயநிர்ணயம், பிராந்திய அரசியல் – சர்வதேச அரசியல் அனைத்திலும் தெளிவான நிலைப்பாட்டுடனும் அதற்கான செயற்திட்டங்களுடனும் மக்களைப் பங்குதாரர்களாக்கிய போராட்ட மூலோபாயங்களை முன்னெடுக்கக்கூடிய தலைமைத்துவப் பண்புகள் கொண்ட தோழர்களின் தியாகங்களை எமது அமைப்பில் மட்டுமன்றி சக அமைப்புகளிலும் கண்டோம். இவை அனைத்துக்கும் மேலாக, போராளிகளை தமது பிள்ளைகள் போல போஷித்துப் பாதுகாத்து ஆதரித்தமைக்காக தம்முயிரைப் பலிகொடுத்த சாமானிய மக்களையும் கண்டோம்.

இத்தனை இருந்தும் என்ன? செல்லரித்துப் போயிருந்த எமது சமூகப் பண்புகளின் செல்வாக்கு போராட்டத் தலைமைகளுக்குள் பெருகத் தொடங்க ஆயுதப் போராட்டம் ஈடாட்டம் காணத் தொடங்கியது. சகோதர இயக்கப் படுகொலைகள் உச்சம் தொட்டன. போராளிள் மட்டுமல்லாது வன்முறைகளை நிராகரித்த அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், சமூகச் செயற்பாட்டளர்கள், ஊடகவியலாளர்களும் கூட படுகொலை செய்யப்பட்டனர்.

ஆயுதப் போராட்டத்தின் செல்திசை மீள முடியாத அழிவு நிலைக்குச் செல்வதை அநேகர் உணர்ந்திருந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தும் திராணி அவர்களுக்கு இருக்கவில்லை. புவிசார் அரசியலை, புவியியல் பரப்பளவை புரியத் தவறிய மரபுவழி யுத்தம் தமிழர்களை முள்ளிவாய்க்கால் கரையில் ஒதுக்கி ஆயிரமாயிரமாய் பலியிட வைத்ததோடு உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய வழியாக அமைந்திருந்த ஆயுதப் போராட்டத்தை எமது மண்ணில் தோல்வியடைந்த விடயமாக்கிவிட்டது.

மக்களை இணைக்காத போராட்டத்தின் பலவீனம், விடுதலை வேண்டி நின்ற மக்களுக்கும் விடுதலை பெறப் போராடிய தலைமைக்கும் இடையே காலத்தால் உருவாக்கப்பட்ட இடைவெளி ஆகியவை இன்றைய நிலையில் மக்களை உரிமைப் போராட்டச் சிந்தனையில் இருந்தே அந்நியப்படுத்தியுள்ளது.

ஆயுதப் போராட்டம் தோல்விகண்டு பதின்னான்கு வருடங்களில் மக்கள் மீண்டும் அதே செல்லரித்துப் போன சாதி, சமய, பிரதேசப் பண்புகளுக்குள் திட்டமிடப்பட்ட வகையில் உள்ளீர்க்கப்படுகிறார்கள். விடுதலைப் போராட்ட அமைப்புகளின் தோற்றங்களுக்கு முன்பு புழக்கத்திலிருந்த சமூக நீதிக்குட்படாத சமூக அமைப்பு முறைகள் மீண்டும் வலுப்பெற்று வருவதைக் காண்கிறோம்.

தமிழ் மக்களின் போராட்ட சிந்தனையை சிதைக்க வேண்டும் என்ற நிரந்தரமான நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படும் பௌத்த சிங்கள ஆளும் வர்க்கம், புதிய புதிய முகவர்கள் மற்றும் அமைப்புகள் ஊடாக அனைத்து வழிகளிலும் பிரிவினைகளை வலுப்படுத்தி தமிழர் சமூகத்தைக் கூறுபோடவும் ஏனைய தேசிய இனங்களுடன் முரண்படவும் வழி சமைக்கின்றன.

ஈழம் தான் தீர்வு என்று புறப்பட்ட தமிழ்ச் சமூகம் இன்று பதின்மூன்றையாவது பெற்றுவிட வேண்டும் எனும் நிலையில் வந்து நிற்கிறது. அரசாங்கங்களின் ஆசீர்வாதத்துடனும் அரச படைகளின் ஆதரவுடனும் வேகம் கொண்டு செயலாற்றும் பௌத்த சிங்கள ஆளுகைகளின் நிகழ்ச்சி நிரலுடன் போட்டிபோட்டு எமது செயற்திட்டங்களை வலுப்படுத்துவதில் அல்லது ஒப்பேற்றுவதில் நாம் பின்தங்கியே உள்ளோம் என்பதை மறைப்பதற்கில்லை.

2009 ம் ஆண்டின் பின் நம் மக்களும் அரசியல் தலைமைகளும் யுத்தம் என்பதே வேண்டாமென்றிருக்கிறோம். ஆனாலும் தெற்கின் அரசாங்கங்களும் மகா
சங்கத்தினரும் அரச படைகளும் புதிய முறையிலான இன அழிப்புப் போர் ஒன்றை தொடங்கி வேகமாக முன்னேறி வருகின்றனர். ஆயிரம் விகாரைகளை வடக்கு கிழக்கில் புனரமைப்பேன் என்று சொன்ன ஜனாதிபதியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாற்பது வீதம் நாடெங்கிலும் ஆயிரம் தாதுகோபங்களை அமைக்கவுள்ளேன் எனச் சொல்லுகின்ற எதிர்க்கட்சி தலைவரும் உள்ள சிங்கள அரசாட்சியில் புதிய இன அழிப்புப் போரை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை வலுப்படுத்த தமிழர்களாகிய நாம் நிர்பந்திக்கப்படுகிறோம்.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் நலன்களுக்காக சிந்திக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தனித்தனியாக அன்றி கூட்டாக கூட்டமைப்பாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உள்ளூர் மற்றும் பிராந்திய புவிசார் அரசியலைப் புரிந்துகொண்டு முன்னெடுக்க வேண்டும். எஞ்சியிருக்கும் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இடைத்தங்கலான தீர்வுகளை நிராகரிக்காத அதேவேளையில் இத் தீவின் தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி அல்லது சுயாட்சித் தீர்வே இறுதியானது எனும் இலக்கில் அவை அனைத்தும் முன்னெடுக்கபபட வேண்டும்.

சமூக நீதி, மதசார்பின்மை போன்ற அடிப்படைக் கொள்கைகளை வரிந்து கொண்ட சமூகமாக, தனித்துவமான மொழி பொருளாதாரம் பண்பாட்டு அம்சங்களுடன் தனது வாழ்வியலை தானே தீர்மானிக்கும் சமூகமாக, ஏனைய சமூகங்களுடன் இணைந்து நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களினது மேம்பட்ட வாழ்வை உறுதிப்படுத்த ஒத்துழைக்கும் சமூகமாக தமிழினம் விளங்க வேண்டுமென்ற கனவில் தமது கல்வி, இளமை, சாமானிய வாழ்வின் சுகங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்து தமிழ் இனத்தின் விடுகலைக்காக போராடப் புறப்பட்டு தம் இன்னுயிரை ஈந்து வரலாற்றின் நாயகர்களாக என்றென்றும் நினைவுரப்படுகின்ற அனைத்துத் தலைவர்கள் போராளிகளினது கனவுகள் மெய்ப்பட அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட உறுதி பூண வேண்டுமென தோழமையுடன் அழைப்பு விடுக்கிறோம். நன்றி.

த. சித்தார்த்தன்
தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
16.07.2023

Recommended For You

About the Author: S.R.KARAN