கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று வியாழக்கிழமை பயணித்தது.
இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந்தெடுக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அநுராதபுரம் – வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
இந்த விசேட ரயிலானது இன்று அதிகாலை 5:45 மணிக்குப் புறப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை பிற்பகல் 3 மணியளவில் வந்தடைந்தது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட குழுவினரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளர் சிவராம் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன, 3000 கோடி ரூபா செலவில் குறித்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார் என்றும் இதற்கமையவே இன்று பரீட்சாத்த ரயில் பயணம் மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.
இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே புதிய அதிசொகுசு ரயில், எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
இதில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு 4,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படும். 4,000 ரூபாய் என்பது அதிகம் தான். இருப்பினும் சேவையின் தரம் கருதி இவ்வாறு கட்டணம் அறவிடப்படுகின்றது என்றார் அமைச்சர்.
இந்நிகழ்வில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.