சிங்கள அதிகாரியை காப்பாற்ற துடிக்கும் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றும் சமன் பந்துசேன ஓய்வுபெற இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் அவரை வடக்கு மாகாணத்திலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு
 பாராளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளரான கலாநிதி விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்  நேரில் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான வரைவு ஒன்றையும் கையளித்தனர்.
பிரதானமாக பதின் மூன்றாவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண தமிழ் மொழியாக்கத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அந்த மாகாணத்தின்  நிர்வாக மொழி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த நிலையில் வடமாகாண பிரதம செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் கூறினர்.
அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த நிலையில்
 வட மாகாண ஆளுநர் சாள்ஸ் வட மாகாண சபையின் பிரதம செயலாளரான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  சமன் பந்துல சேனவை மாற்ற வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட வடமாகாண சபை அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மநாதன் மற்றும் வினோ நோதராதலிங்கம் ஆகியோர் வடக்கின் தற்போதய ஆளுநர் மாகாண அதிகாரத்தை காப்பாற்றுவார் என புகழ்பாடியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதம செயலாளரை மாற்ற வேண்டாம் என ஆளுநர் கோரியிருப்பது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதைய வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது வவுனியாவில் இடம்பெற்ற காணி முறைகேடு தொடர்பில் தற்போதைய ஆளுநர் சாள்ஸின் கணவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட செயலகத்தை முடக்கிப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அப்போது வடமாகாண ஆளுநராக சாள்ஸ் இருந்த நிலையில் அதனை சூட்சுமமாக கையாண்டு தீர்வு தரலாம் என மக்களை வீடுகளுக்கு அனுப்பியவர் சமன் பந்துலசேன.
இவ்வாறான நிலையில் தற்போது வட மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, உள்ள நிலையில் அவரை மாற்றினால் புதியவர் ஒருவர் ஆளுநர் செயலகத்திற்கு ஏற்றால் போல் செயற்படுவாரா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கும்.
  ஆளுநராக இருக்கும் சாள்ஸ் தனது பதவிக்காலம் முடியும் வரை பிரதம செயலாளராக சமன் பந்துலசேனவே இருந்து விட்டால்  பிரச்சினை எழாது எனக் கருதுகிறார்.
இவ்வாறான நிலையில் எட்டாக்கனியாக இருந்த ரணிலின் இந்திய விஜயத்தை உறுதி செய்த பங்கு இரு விக்னேஸ்வரன்களைச் சாரும் நிலையில் விக்னேஸ்வரன்களின் கோரிக்கையை மீறி ரணில் செயல்படுவாரா என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
ஆகவே, 13 ஐ நடைமுறைப்படுத்த ஆளுநர் உதவுவார் எனக் கூறிய சில தமிழ் தரப்புகள் பிரதம செயலாளர் மாற்றம் தொடர்பில் என்ன கூறப் போகின்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN