வடக்கு மக்களே அவதானம்! யாழில் மட்டும் 1,500 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் கடந்த அரையாண்டில் மட்டும் 1, 843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1,843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்தார்.

இதுதவிர வடமாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் 1,491 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1,843 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

வடமாகாணத்தில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது.

யாழ். நகர், நல்லூர், கரவெட்டி பகுதிகளில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

ஏனைய நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, டெங்கு நோய்த் தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN