யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ . சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை – முன்னெடுக்கப்படுவது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் வினவிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளை மாவட்ட சமுர்த்திஅலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும். அந்த மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டமான சமுர்த்திப் பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் முன் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள். முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது