நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் மீண்டும் நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல (Keheliya Rambuwella) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 181 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 67 ஆயிரத்து 916ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் பதிவான மொத்தக் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.