புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்திற்கு குடும்பத் தகராறே காரணம் என கைதான சந்தேகநபர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைதான இளைஞர் பொலிஸில் வழங்கிய வாக்குமூலத்தில், தான் சிறுமியைக் கடத்தவில்லை என்றும், தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிறுமியை அவரிடம் அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையை பார்க்க அனுமதிக்காத தாய்
நேற்றுமுன்தினம் காலை, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் பெண்மணி ஒருவர் தனது 10 வயதுச் சிறுமியை தனியார் கல்வி நிறுவனத்தில் இறக்கியுள்ளார்.
அதேநேரம் மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அவரை பொலிஸிடம் ஒப்படைத்தனர்.
கைதான இளைஞரிடம் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணை நடத்திய போது, சிறுமியின் தந்தையார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாக கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். தனது பிள்ளையைப் பார்க்க மனைவி அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு, சிறுமியின் தந்தை தன்னிடம் உதவி கோரியதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தந்தையும், கைதான இளைஞரும் நண்பர்கள் என்றும், தனியார் வகுப்புக்கு வரும் போது, சிறுமியை அழைத்து வருமாறு தந்தை கேட்டதால், சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும், சிறுமிக்குத் தன்னைத் தெரியாதால் கத்தி சத்தமிட்டதாகவும் இளைஞர் பொலிஸ் விசாரணைகளில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.