முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு ஆட்சேபனையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பதவிகளுக்காக யாரை நியமித்தாலும் நாடாளுமன்றத்தை கலைத்து துரித கதியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மகிந்த பிரதமராவதில் பிரச்சினையில்லை
மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கோருவதாக நாட்டில் அதிகமாக பேசப்படுகின்றது, யாரிடம் இதனைக் கேட்கின்றார்? எங்களது ஜனாதிபதியிடம் இதனக் கோருகின்றார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதில் பிரச்சினையில்லை. எனினும் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
நாம் அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்கின்றோம். உங்களிடம் ஜனாதிபதி பதவி இருக்கும் எங்களிடம் நாடாளுமன்ற அதிகாரம் இருக்கும். உண்மையில் மக்கள் ஆணை யாருக்கு உண்டு என்பது அம்பலமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.