பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் பெண்ணொருவர், லொறி மோதி உயிரிழந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 32 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.
ஆயுள் காப்புறுதித் திட்டங்கள்
பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நபரை நேற்றிரவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பெயரில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள நான்கு ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் இருந்ததாகவும், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே சந்தேக நபர் காதலியை திட்டமிட்டு கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மறுநாள் மாபலகம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பெண்ணை லொறியால் மோதி கொலை செய்த வாகன சாரதி தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் இன்று (04) எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.