திகதி குறிப்பிடப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுவதாகவும் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே நாட்டின் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறபோகிறது.
இருந்தாலும், நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்று அதற்கு முன் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருகின்றார் என்றும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதிகாரம் இல்லை
ஜனாதிபதி ஒருவர் நான்கு வருடங்கள் அவரது பதவிக் காலத்தைக் கழித்த பின் தேர்தலுக்குச் செல்வதற்கான அவரது விருப்பத்தை அறிவிக்க முடியும்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால ஜனாதிபதியாக இருப்பதால் சட்ட ரீதியாக அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளும் வேட்பாளர்கள் தயாராவதும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மொட்டுத் தரப்பில் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாச, ஜே.வி.பியில் அநுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரிபால சிறிசேன உட்பட ஏனைய கட்சிகளிலும் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.